வரலாற்றுச் சிறப்புமிக்க காலை உணவுத் திட்டமும் ஆளுநரின் அபாய யோசனையும்!

சென்னை மாநகராட்சிப் பள்ளியின் மூலம் காலை உணவுத் திட்டத்தில் காலடி எடுத்துவைத்திருக்கிறது தமிழக அரசு.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவு இது; அதிமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாகவும் இது இடம்பெற்றிருந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இத்திட்டம் கொண்டாடத்தக்கது. இத்திட்டத்தைத் தொடக்கிவைத்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாநிலம் முழுமைக்கும் இத்திட்டம் விஸ்தரிக்கப்பட வேண்டும்; இதில் தமிழக அரசு, கொடையாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருப்பது வரவேற்புக்குரியது என்பதோடு, மக்கள் மனதைப் பிரதிபலிப்பதாகவும் அமைந்திருக்கிறது. கூடவே ஆளுநர் இன்னொரு யோசனையையும் தமிழக அரசுக்கு முன்வைத்திருக்கிறார். இந்தக் காலை உணவுத் திட்டத்தைச் சம்பந்தப்பட்ட பள்ளியில் வழங்க பொறுப்பேற்றிருக்கும் ‘அக்சய பாத்ரா’ தொண்டு நிறுவனத்திடமே தமிழகத்தின் மதிய உணவு வழங்கும் திட்டத்தையும் ஒப்படைக்கக் கோரியிருக்கிறார். இது மிக அபாயகரமான யோசனை; மதிய உணவுத் திட்டத்திலிருந்து மாநில அரசை விடுவிக்க வழிவகுப்பதாக அமையும் இந்த யோசனையைத் தமிழக அரசு முற்றிலுமாக ஒதுக்கித்தள்ள வேண்டும்.

மதிய உணவுத் திட்டத்தைப் பொருத்த அளவில், தமிழ்நாட்டுக்கு அதில் நீண்ட வரலாறு உண்டு. 1923-ல் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் இத்திட்டத்தை சென்னை மாகாண அரசு தொடங்கிவைத்தது. மக்கள் பங்களிப்புடன் மதிய உணவுத் திட்டத்தை முழுமையடையச் செய்தவர் காமராஜர். பின்னர் அதைச் சத்துணவுத் திட்டமாக எம்ஜிஆர் விஸ்தரித்தார். தொடர்ந்து கருணாநிதியும் ஜெயலலிதாவும் அதை மேலும் மேம்படுத்தினர். வாரத்தில் ஐந்து முட்டைகளோடு சத்துணவை வழங்கும் தமிழ்நாட்டு அரசின் இத்திட்டம் கடந்த காலத் தமிழ்நாட்டின் கல்வி, பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்களித்திருப்பதோடு, நாட்டுக்கே முன்மாதிரியாகவும் ஆகியிருக்கிறது. இத்தகைய சூழலில், மதிய உணவுத் திட்டத்தை ஒரு தொண்டு நிறுவனத்திடம் – தனியார் அமைப்பிடம் வழங்க வேண்டிய தேவை என்ன?மேலும், ஆளுநரின் யோசனையில் சம்பந்தப்பட்டிருக்கும் தொண்டு நிறுவனம் பல மாநிலங்களில் சத்துணவு வழங்கும் திட்டத்தில் ஈடுபட்டிருந்தாலும், அதன் மீது பல்வேறு புகார்களும் உள்ளன. இந்நிறுவனம் தரமற்ற உணவை வழங்குவதாகக் கர்நாடக அரசே குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. எல்லாவற்றுக்கும் மேலாக தன்னுடைய சைவக் கொள்கையை மாணவர்கள் மீது திணிக்கும் அமைப்பு இது என்ற பெயரும் அதற்கு உண்டு. இந்தியாவில் பாஜக ஆளும் பெரும்பாலான மாநிலங்களில் இன்று சத்துணவில் முட்டைக்கு இடம் இல்லை; அதே சூழலைத் தமிழ்நாட்டிலும் உருவாக்கும் நோக்கத்தோடு இந்த யோசனை பேசப்படுகிறதா என்று எழும் சந்தேகம் புறக்கணிக்கத் தக்கதல்ல. ஏழை மாணவர்களின் ஊட்டச்சத்தோடு விளையாடுவது இரக்கமற்றது.

காலை உணவுத் திட்டத்தில் தமிழகத்துக்குள்ளேயே ஏற்கெனவே நல்ல முன்னுதாரணங்கள் உண்டு. திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் பள்ளியில், ஆசிரியர்களின் பங்களிப்புடன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக காலை உணவுத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் பல பள்ளிகளில் சமூக அமைப்புகளின் பங்கேற்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட அமைப்பிடம் எல்லாப் பள்ளிகளுக்குமான பொறுப்பையும் வழங்குவதைக் காட்டிலும் திருச்சி முன்மாதிரியே சிறந்த மாதிரியாக அரசுக்கு இருக்கக் கூடும். தமிழகம் முழுக்க இத்திட்டத்தை அரசு விஸ்தரிக்கட்டும்; அரசின் பொறுப்பிலேயே சத்துணவுத் திட்டம் தொடரட்டும்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s